Tuesday, June 22, 2010

மார்லன் பிராண்டோ – தி காட் ஃபாதர்



மார்லன் பிராண்டோவுக்கு அகாதமி அவார்ட் கிடைத்த பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலாவின் தி காட் ஃபாதர் 1972 ஆம் ஆண்டு வெளியானது. அமெ‌ரிக்க நிழல் உலக சாம்ரா‌‌ஜ்யத்தில் இத்தாலி குடும்பங்களின் ஆதிக்கத்தை இதில் நுட்பமாக பதிவு செய்திருந்தார் கப்போலா.

மார்லன் பிராண்டோவுக்கு இதில் கார்லியோன் குடும்பத்தின் தலைவர் கதாபாத்திரம். விட்டோ கார்லியோன். நண்பர்களுக்கும், நிழல் உலக தாதாக்களுக்கும் அவர் காட் ஃபாதர். கார்லியோன் குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து மாஃபியா குடும்பங்கள் அமெ‌ரிக்காவின் நிழல் உலக வியாபாரத்தை கட்டுப்படுத்தின.

Mario Puzo 1961ல் எழுதிய தி காட் ஃபாதர் நாவலை தழுவி இந்தப் படத்தை எடுத்தார் கப்போலா. படத்துக்கான திரைக்கதையை ம‌ரியோவும், கப்போலாவும் இணைந்து எழுதினர். இத்தாலியிலுள்ள கார்லியோன் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் விட்டோ கார்லியோன். இவரது தந்தை உள்ளூர் தாதா ஒருவருடனான மோதலில் கொல்லப்படுகிறார். அவரது சவ அடக்கத்தின் போது அதே தாதாவின் ஆட்களால் அவரது மூத்த மகனும் சுட்டுக் கொல்லப்படுகிறான். அந்த குடும்பத்தில் எஞ்சியிருப்பது தாயும், ஒன்பது வயது விட்டோ கார்லியோனும் மட்டுமே.

ஒன்பது வயது விட்டோ கார்லியோனால் எந்தப் பிரச்சனையும் வராது, அவனை ஒன்றும் செய்யாதீர்கள் என தாதாவிடம் முறையிடுகிறாள் விட்டோவின் தாய். மறுக்கிறார் தாதா. தனது உயிரைக் கொடுத்து தாய் மகனை காப்பாற்றுகிறாள். சிலரது உதவியினால் அமெ‌ரிக்காவுக்கு வந்து சேர்கிறான் சிறுவனான விட்டோ கார்லியோன்.

விட்டோ கார்லியோனின் இளமைப் பருவமும், அவர் படிப்படியாக அமெ‌ரிக்காவின் நிழல் உலகை கட்டுப்படுத்தும் டானாக உயர்வதும் காட் ஃபாதர் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது. இதில் இளவயது விட்டோ கார்லியோனாக நடித்திருந்தவர் ராபர்ட் டி நீரோ.

முதல் பாகத்தில் போதை மருந்து வியாபாரம் செய்ய வருகிறவன், விட்டோ கார்லியோனிடம் (மார்லன் பிராண்டோ) நிதி மற்றும் பாதுகாப்பு உதவிகளை கேட்கிறான். போதை மருந்து வியாபாரம் செய்வது தெ‌ரிந்தால் அரசாங்கத்தில் உள்ள தனது நண்பர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என மறுக்கிறார் பிராண்டோ. இதனைத் தொடர்ந்து பிராண்டோ கடைவீதியில் வைத்து சுடப்படுகிறார். மருத்துவமனையில் அவரை கொலை செய்ய நடக்கும் சதியை முறியடிக்கிறான், கடற்படையில் வீரனாக இருக்கும் அவரது இளைய மகன் மைக்கேல் (அல்பசினோ).

தொடர்ந்து நடக்கும் கேங் வா‌ரில் தனது மூத்த மகனை இழக்கிறார் பிராண்டோ. உடல்நிலை காரணமாக தனது அதிகாரத்தை இளையமகன் மைக்கேலிடம் ஒப்படைக்கிறார். பிராண்டோவின் வயோதிகம் பேரக் குழந்தையுடன் கழிகிறது. வீட்டில் உள்ள உருளைக்கிழங்கு தோட்டத்தில் பேரனுடன் விளையாடும்போது அவரது உயிர் பி‌ரிகிறது.


கேங்ஸ்டர் படங்களின் புதிய அத்தியாயம் தி காட் ஃபாதர் படத்திலிருந்து தொடங்குகிறது. கொலையை மட்டும் காட்சிப்படுத்தாமல் கொலைக்கான முகாந்திரம், மனநிலை, நிழல் உலக குடும்பங்களின் நிலைமை, அவர்களின் கொண்டாட்டங்கள், துக்கங்கள் என அனைத்தையும் நெருங்கி ஆராய்கிறது தி காட் ஃபாதர். விட்டோ கார்லியோன் கதாபாத்திரத்தை தனது அற்புதமான நடிப்பால் என்றும் அழியாத காவியமாக்கியிருந்தார் பிராண்டோ.

இந்தப் படத்தில் பிராண்டோவை நடிக்க வைப்பதற்காக ஏறக்குறைய ஒரு வருடம் காத்திருந்தார் கப்போலா. படத்தை தயா‌ரித்த பாராமவுண்ட் ஸ்டுடியோ, பிராண்டோ கார்லியோன் கதாபாத்திரத்தில் நடிப்பதை ஏற்கவில்லை. அன்று ஹாலிவுட், ஸ்டுடியோக்களின் அதிகார கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தும் அதிகார மையமாக ஸ்டுடியோக்கள் விளங்கின. இயல்பிலேயே கலகக்காரரான பிராண்டோ இந்த அதிகாரத்துக்கு ஒருபோதும் கட்டுப்பட்டதில்லை. இதன் காரணமாக பிராண்டோவை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அன்றைய எல்லா ஸ்டுடியோக்களும் மேற்கொண்டன.

ஒருவருட நீண்ட போராட்டத்துக்குப் பின் கப்போலாவின் கோ‌ரிக்கையை பாராமவுண்ட் ஏற்றது. அப்போதும் அது ஒரு நிபந்தனை விதித்தது. படப்பிடிப்புக்குமுன் பிராண்டோ மேக்கப் டெஸ்ட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும். அறிமுக நடிகர்களுக்குதான் படத்தில் நடிப்பதற்குமுன் மேக்கப் டெஸ்ட் வைப்பார்கள். பிராண்டோவை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நிபந்தனையை பாராமவுண்ட் விதித்தது. அது எதிர்பார்த்தது போலவே இந்த நிபந்தனைக்கு பிராண்டோ ஒத்துக் கொள்ளவில்லை. கப்போலாவின் வேண்டுகோளை ஏற்று இறுதியில் பிராண்டோ மேக்கப் டெஸ்டுக்கு ஒத்துக் கொண்டார்.

ஸ்டுடியோவின் மேக்கப்மேனை தவிர்த்து தானே ஒரு மேக்கப்மேனை வரவழைத்து பஞ்சு உருண்டைகளை தாடையினுள் வைத்து கப்போலாவுக்காக காத்திருந்தார் பிராண்டோ. அவரது கெட்டப்பைப் பார்த்த ஸ்டுடியோ நிர்வாகிகளால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. பிராண்டோவை விட அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் யாருமில்லை என்பதை அந்த கெட்டப்பே அவர்களுக்கு உணர்த்தியது.

மார்லன் பிராண்டோ பிறந்தது அமெ‌ரிக்காவிலுள்ள நெப்ரஸ்காவில். வருடம் 1924 ஏப்ரல் 3ம் தேதி. அப்பாவின் மார்லன் பிராண்டோ என்ற பெயரையே மகனுக்கும் வைத்தனர். தாய், டோரதி ஜூலியா பென்னிபேக்கர். இவரொரு நடிகை. பிராண்டோவின் நடிப்பு மீதான காதல் அவரது அம்மாவிடமிருந்து தொடங்குகிறது.

பிராண்டோவின் 11வது வயதில் தாயும், தந்தையும் பி‌ரிகிறார்கள். அம்மா, மற்றும் பாட்டியுடன் அவரது இளமைப் பருவம் கழிகிறது. பிராண்டோவின் தாய் பெரும் குடிகாரர். அவரது குடிப் பழக்கம் பிராண்டோவை சிறு வயதில் மிகவும் பாதித்தது.

நாடகத்திலிருந்தே சினிமாவுக்கு வந்தார் பிராண்டோ. அவரது முதல் படம் தி மென். ஐம்பதுகளில் எலியா கசன் இயக்கத்தில் வெளியான எ ஸ்ட்‌‌ரீட் கார் நேம்டு டிஸையர், ஆன் தி வாட்டர் பிரெண்ட் ஆகிய திரைப்படங்கள் பிராண்டோவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. வாட்டர் ‌ப்ரெண்டில் பிராண்டோவின் மெத்தட் ஆக்டிங் தமிழக ரசிகர்களையும் ஆகர்ஷித்தது. அசோகமித்ரன் போன்ற தமிழ் இலக்கியவாதிகள் பிராண்டோவின் நடிப்பு குறித்து வியந்து எழுதியுள்ளனர்.

சமூக நீதிக்கான போராட்டங்களில் தன்னையும் விரும்பி இணைத்துக் கொண்டார் பிராண்டோ. அதிகாரம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை எதிர்க்கும் குணம் அவ‌ரிடம் இருந்தது. அமெ‌ரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் மூன்றாம் குடிகளைப் போல் நடத்தப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தார். ஒரு பேட்டியின் போது கேள்வியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் செவ்விந்தியர்களைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தா‌ர் பிராண்டோ.

திறமையான இயக்குனர்களை தேடிப் பிடித்து அவர்களின் படங்களில் நடித்தார் பிராண்டோ. பெர்னார்டோ பெர்ட்லூசியின் லாஸ்ட் டாங்கோ இன் பா‌ரிஸ் திரைப்படத்தில் நடித்ததைப் பற்றிக் குறிப்பிடும்போது, பெர்ட்லூசி படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு இன்றும் தெ‌ரியாது. ஆனால் ஏதோ முக்கியமான ஒன்றை அவர் சொல்லியிருக்கிறார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். இந்தப் படத்தில் அப்பட்டமான உடலுறவுக் காட்சிகள் இடம்பெற்றன. அவை மிகப்பெ‌ரிய சர்ச்சையை கிளப்பியது. இந்தக் காட்சிகளுக்காகவே பல நாடுகளில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

பெண்கள் விஷயத்தில் தானொரு ப்ளேபாயாக இருந்ததை பிராண்டோவே ஒப்புக் கொண்டிருக்கிறார். நாடகத்தில் நடிக்கும் போது, நாடகம் முடிந்ததும் பிராண்டோவைப் பார்ப்பதற்கு பெண்கள் மேடைக்கு பின்புறம் காத்திருப்பார்கள். தனது சுயச‌ரிதையில், அப்படி காத்திருக்கும் பெண்களில் மிக அழகானவள் நான் வீட்டிற்கு திரும்பும்போது என்னுடைய பைக்கின் பின்புறம் அமர்ந்திருப்பாள் என்று எழுதுகிறார்.

பிராண்டோவுக்கு மூன்று மனைவிகள். அவர்களுக்குப் பிறந்தவர்கள் போக மூன்று குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டார். அவரது ஹவுஸ்கீப்பருடன் ஏற்பட்ட உறவில் பிறந்தவர்கள் மூன்றுபேர். மர்லின் மன்றோவுடனான இவரது உறவு பிரசித்திப் பெற்றது. தானொரு ஓ‌ரினச் சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்திருந்தார் பிராண்டோ. இவையெல்லாம் அவர் ஒரு மோசமான நபர் என்ற பிம்பத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது.

உண்மையில், எந்த ஒழுக்க நியதிகளுக்குள்ளும் கட்டுப்படாமல் சுதந்திரமாக தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயன்றார் பிராண்டோ. தனது செயல்பாடுகளை மறைத்து போலியான மதிப்பீடுகளை உருவாக்க அவர் விரும்பவில்லை. மேலும், தன்னைப் பற்றி எவ்விதமான மதிப்பீடுகள் உருவாவதையும் அவர் வெறுத்தார்.

தன்னைப் பற்றிய அனைத்து விமர்சனங்களையும் தனது அற்புதமான நடிப்புத் திறமையால் கடந்தவர் பிராண்டோ. இன்றைய ஹாலிவுட்டின் மிகப் பெரும் நடிகர்களான அல்பசினோ, ராபர்ட் டி நீரோ போன்றவர்கள் பிராண்டோவால் இத்துறையில் ஊக்கம் பெற்றவர்கள். ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் இறுக்கமான அதிகார மையத்தை உடைத்த முதல் கலைஞன் அவர். மைக்கேல் ஜாக்சனுடன் தனது மரணம் வரை நல்ல நட்பை பேணினார் பிராண்டோ.

அபி‌ரிதமான ரசிகர் செல்வாக்கு இருந்தபோதும் அவரது மனம் தடுமாறியதில்லை. தன்னை அளவுக்கதிகமாக நேசிக்கும் ரசிகர்கள் குறித்து பேசும்போது, ஒருவரை அளவுக்கதிகமாக நேசிப்பது என்பது அதே அளவுக்கு இன்னொருவரை வெறுப்பதுடன் தொடர்புடையது என்றார்.

நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்த மார்லன் பிராண்டோ 2004 ஜூலை ஒன்றாம் தேதி மரணமடைந்தார். க‌ட‌ந்த ஏப்ரல் 3ஆம் தேதி அவருக்கு 85 வது பிறந்தநாள்.

என்.எஸ்.கிருஷ்ணன் - சி‌ரிக்க வைத்த சிந்தனையாளர்



நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.

என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.

இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.

நாடகத்தில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமை கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.

கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌ர் அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.

கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.

தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.

சாமா அய்யர் கதைப்படி வில்லன். நாயகியை கடத்தி வந்து ஐயாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார். அவருக்கு உடந்தையாக இருக்கும் தாசி கமலம், அவ‌ரிடமிருந்து பணத்தை அபேஸ் செய்ய சாமா அய்யரை மயக்கி பாட்டுப் பாடும் காட்சியும் படத்தில் உண்டு.

1935ல் எடுக்கப்பட்ட மேனகாவில் வில்லனாக காட்டப்பட்டவர் ஒரு அய்யர். ஆனால் இன்று...? அய்யர் என்றாலே அப்பாவிகள், அநீதியை கண்டு குமுறுகிறவர்கள். (அய்யர் என்றால் அக்மார்க் அம்மாஞ்சிகள் என்ற இன்றைய தமிழ் சினிமா கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று).

பாரதியார் பாடல்கள் முதலில் திரையில் ஒலித்தது ஏவி.எம். தயா‌ரித்த படத்தில் என்று இன்றளவும் கூறப்படுகிறது. அந்த கருத்து தவறானது. திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் தயா‌ரித்து ராஜா சாண்டோ இயக்கத்தில் கலைவாணர் நடித்த மேனகா திரைப்படத்தில்தான் முதல்முதலாக பாரதியார் எழுதிய வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே பாடல் ஒலித்தது.

திரைத்துறைக்கு வரும் முன்பே நாகம்மை என்பவருக்கும் கலைவாணருக்கும் திருமணம் நடந்தது. நாகம்மை அவரது உறவுக்காரர். நடிக்க வந்த பிறகு உடன் நடித்த டி.ஆர்.ஏ.மதுரத்தை காதலித்து இரண்டாவதாக மணம்பு‌ரிந்து கொண்டார். (மதுரத்துக்குப் பிறந்த குழந்தை இறந்த பிறகு மதுரத்தின் சம்மதத்துடன் அவரது தங்கை வேம்புவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்). கிருஷ்ணன், மதுரம் ஜோடி திரையில் புகழ்பெறத் தொடங்கியது.

தனது முதல் திருமணத்தை மறைத்தே மதுரத்தை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணன். இது தெ‌ரிய வந்த பிறகு கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தார் மதுரம். தியாகராஜ பாகவத‌ரின் அம்பிகாபதி படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இந்த‌ப் பி‌ரிவு அதிகநாள் நீடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்தப் படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாததை உணர்ந்தவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர்.

கலைவாண‌ரின் திரை ஆளுமையை வடிவமைத்ததில் பெ‌ரியாருக்கும், பா.‌‌ஜீவானந்தத்துக்கும் பெரும் பங்குண்டு. ‌ஜீவானந்தம் கலைவாண‌ரின் நெருங்கிய நண்பர். பெ‌ரியா‌ரின் பிராமணருக்கு எதிரான கட்டுரைகள் கலைவாண‌ரிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. தான் நடிக்கும் படங்களில் பகுத்தறிவு சிந்தனைகளை இயல்பாக சேர்த்துக் கொண்டார் கலைவாணர். பாகவத‌ரின் பக்திப் படமான திருநீலகண்டர் படத்திலும் கடவுளை கிண்டல் செய்யும் பாடலை இடம்பெறச் செய்தார்.

இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றை குறிப்பிட வேண்டும். சிலரது நகைச்சுவையை‌ப் போல் என்.எஸ்.கே.யின் நகைச்சுவை பிறரை காயப்படுத்துவதில்லை. ஹாஸ்யம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எழுதிய அறிஞர் வ.ரா. “கிருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே வினோதமாக இருக்கிறது. யாரை அவர் கேலி செய்து கிண்டல் பண்ணுகிறாரோ அவரும் சேர்ந்து சி‌ரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். பிறருடைய உள்ளத்தை குத்திப் பிளப்பதில்லை. அவர் பிறருடைய உள்ளத்தை வி‌ரிய‌ச் செய்கிறார்.” என்று எழுதுகிறார்.

1944 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மோசமான வருடம். 1944 நவ. 27 கலைவாண‌ரின் இரண்டாவது கைது நடந்தது. இந்துநேசன் பத்தி‌ரிகையாசி‌ரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தொடர்பாக கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். லட்சுமிகாந்தனின் இந்துநேசன் ஒரு மஞ்சள் பத்தி‌ரிகை.

பிரபல நட்சத்திரங்களை பற்றி கற்பனையான கிசுகிசுக்களை எழுதி பத்தி‌ரிகையை நடத்தி வந்தார் லட்சுமிகாந்தன். அவரது பேனா கொடுக்குக்கு இரையாகாமல் இருக்க பலரும் அவருக்கு பணம் கொடுத்து வந்தனர். கலைவாணர் பணம் கொடுக்க மறுத்தார். கலைவாணர் பற்றியும் பாகவதர் குறித்தும் தனது பத்தி‌ரிகைகளில் கற்பனையான பல கதைகளை எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.

தங்களது நிரபராதித்துவத்தை நிரூபிக்க கலைவாணருக்கும், பாகவதருக்கும் பல வருடங்கள் பிடித்தது. சிறை மீண்டபின் பழைய உற்சாகத்துடன் திரை வாழ்க்கையை‌த் தொடங்கினார் கலைவாணர். கே‌ரி கூப்பர் நடிப்பில் வெளிவந்த டெட்ஸ் கோஸ் டூ டவுன் படத்தை நல்லதம்பி என்ற பெய‌ரில் மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், பானுமதி ஆகியோருடன் இணைந்து தயா‌ரித்தார். அண்ணா படத்தின் திரைக்கதையை எழுதி‌க் கொடுத்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகு கலைவாணருடன் அண்ணாவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. கலைவாணர் வாங்கிக் கொடுத்த காரை அவர் திருப்பி அனுப்பினார். கலைவாணர் இயக்கிய முதல் படம் மணமகள். இன்றைய முதல்வர் கருணாநிதி படத்துக்கு வசனம் எழுதினார். நாட்டிய‌ப் பேரொளி பத்மினி அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான். கலைவாணர் இயக்கிய இன்னொரு படம் பணம்.

சொந்தமாக படம் தயா‌ரிக்கத் தொடங்கிய பிறகு கலைவாணருக்கு வாய்ப்புகள் குறைந்தன. செலவு இருமடங்கானது. ஆனாலும், கலைவாணரைத் தேடி உதவி பெற்று செல்கிறவர்கள் குறையவில்லை. தன்னிடம் இல்லாதபோது பிற‌ரிடம் கடன் வாங்கி உதவிகளை‌த் தொடர்ந்தார். இறுதிவரை அவரது உதவி செய்யும் குணத்தை தோல்விகளால் தடுக்க முடியவில்லை.

ஐம்பது வயதிற்குள் இதே புகழுடன் இறந்துவிட வேண்டும் என்று மதுரத்திடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் கலைவாணர். அதே போல் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி தனது 49வது வயதில் மரணத்தை தழுவினார் கலைவாணர்.

* * *

ஒரு கலைஞனை எங்ஙனம் நினைவுகூர்வது என்பது இன்னும் நமக்கு கைவரப் பெறவில்லை. அவனது ஆளுமையின் சாராம்சத்தை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் நமக்கு எப்போதும் தோல்வியே ப‌ரிசாகியுள்ளது. கலைஞனை, அவனது ஆளுமையை ஒரு பொருட்டாக மதிக்காததின் விளைவுகள் இவை என்ற பு‌ரிதலும் நமக்கில்லை.

பிறந்தநாள் அன்று நினைவுக்கூட்டம், ஒரு நினைவுச்சின்னம், அதிகபட்சம் தபால்தலை என நமது சடங்குகள் ஒரு வட்டத்தைவிட்டு வெளியேறியதில்லை. கலைவாணரும் இந்த வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.

கலைவாணர் என்றதும் அவரது சிந்திக்க வைக்கும் சி‌ரிப்புக்கு முன்னால் நினைவுக்கு வருவது அவரது வள்ளல் குணம். பெரும்பாலான கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிறருக்கு உதாரணமாக இருப்பதில்லை. கலைவாணர் விதிவிலக்கு.

“என்னிடம் வந்து சேரும் பணத்துக்கும், பணக்காரர்களிடம் வந்து சேரும் பணத்துக்கும் வித்தியாசம் உண்டு. என் பணம் ஏழைகளுக்கு உதவும், பணக்காரர்களின் பணம் ஏழைகளை உறிஞ்ச‌த்தான் உதவும்.” சொன்னது போலவே வாழ்ந்து காட்டினார். அதுதான் கலைவாணர்.

இந்த உதாரண குணத்தை இளைய தலைமுறை அறிய செய்திருக்கிறோமா என்றால் இல்லை. பா‌ரியையும், கோ‌ரியையும் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது நல்லதுதான். அத்துடன் திருட வந்தவனை திருடன் என்று மனைவியிடம்கூட சொல்லாமல் தன்னுடைய நாடகத்தில் வேலை பார்ப்பவன் என்று கூறி அவன் தேவைக்கு பணம் கொடுத்து உதவிய கலைவாணரையும் சொல்லிக் கொடுப்பதுதானே நியாயம்.

மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போதும், கட்டுகட்டாக பணம் வைத்துச் சென்ற எம்.‌ஜி.ஆ‌ரிடம், சில்லரையாக வைத்தால் இங்கிருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பேனே என்று சொன்னவ‌ரின் கதை சிறார்களிடம் பதிய வைக்க வேண்டிய ஒன்றல்லவா.

சிறைக்கு சென்றுவந்த பிறகுதான் பம்மல் சம்பந்த முதலியார் அவருக்கு கலைவாணர் என்ற பட்டத்தை அளித்தார். ஏன்? அவரது வள்ளல் குணத்துக்கு முன்னால் சிறையும் ச‌ரி, தண்டனையும் ச‌ரி மாசு கற்பிக்க முடியவில்லை. உங்களுடைய கொள்கை என்ன என்று ஒருமுறை கேட்டதற்கு சுயம‌ரியாதை என்று பதிலளித்தார் கலைவாணர். அவரது கொள்ளை சுயம‌ரியாதை என்றால் அவரது குணம் அன்பு செய்வது.

இந்த இரண்டின் பிரதிபலிப்புதான் அவரது நாடகங்களும், சினிமாவும். இதுதான் அந்த கலைஞனின் சாராம்சம்... நினைவுச்சின்னம், நினைவுத் தபால்தலை போன்ற மரபான சடங்குகளால் கௌரவிக்க முடியாத கலைவாணர் என்ற மாமனிதனின் சாராம்சம்.

சிட்டி லைட்ஸ் - வாழ்வின் பேரதிசயம்



சார்லி சாப்ளினின் கலை உச்சங்களில் ஒன்று சிட்டி லைட்ஸ். படத்தின் ஒரு ப்ரேம்கூட தேவையற்றது என ஒதுக்க முடியாத அளவுக்கு கச்சிதமான படைப்பு. அர்த்தமின்றி நகரும் வாழ்வின் பேரதிசயம் எதிர்பார்ப்பில்லாத அன்பில் மறைந்திருக்கிறது என்பதை கலாபூர்வமாக சொல்கிறது சிட்டி லைட்ஸ்.

சார்லி சாப்ளின் வீடில்லாத நகரத்தின் நாடோடி. ரொட்டிக்கான தினச‌ரி தேடுதல் வேட்டையில் ஒருநாள் தெரு ஓரம் பூ விற்கும் கண் தெ‌ரியாத இளம்பெண்ணை சந்திக்கிறார். சாப்ளின் ஒரு பணக்கார கனவான் என அந்தப் பெண் நினைக்கும்படி அந்த சந்திப்பு அமைந்து விடுகிறது.

அன்றிரவு தற்கொலைக்கு முயலும் செல்வந்தர் ஒருவரை சாப்ளின் காப்பாற்றுகிறார். தனது வீட்டிற்கு சாப்ளினை அழைத்துச் செல்லும் செல்வந்தர், இனி தற்கொலைக்கு முயல்வதில்லை என உறுதி அளிக்கிறார். இருவரும் சொகுசு ஹோட்டல் ஒன்றில் ஆட்டம் பாட்டத்துடன் அன்றிரவை கழிக்கிறார்கள்.

மறுநாள் செலவந்த‌ரின் வீட்டருகில் அந்த கண் தெ‌ரியாத இளம் பெண்ணை மீண்டும் சந்திக்கிறார் சாப்ளின். செல்வந்த‌ரின் கா‌ரில் அவளை அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தனிமையும், வறுமையும் நிறைந்த அவளின் வாழ்க்கை சாப்ளினுக்கு தெ‌ரிய வருகிறது.

இதனிடையில் செல்வந்தருடனான சாப்ளினின் சந்திப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. போதையில் சாப்ளினுடன் நண்பராக அன்னியோன்யத்துடன் பழகுகிறவரால், போதை தெ‌ளிந்த பின் அதனை நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. சாப்ளினை வீட்டை விட்டு துரத்துகிறார். நமது நாடோடிக்கோ அது ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

பார்வையற்ற பெண் பல மாதங்களுக்கான வாடகை பாக்கி தர வேண்டியிருக்கிறது. இரண்டு நாளில் அதனை தர இயலாதபட்சத்தில் வீட்டை காலி செய்தாக வேண்டும். தனது ஏழ்மையை நினைத்து அழும் அவளை சாப்ளின் தேற்றுகிறார். கண் தெ‌ரியாதவர்களுக்கு பார்வை தரும் மருத்துவரை பற்றி பத்தி‌ரிகையில் வந்திருக்கும் செய்தியை படித்துக் காட்டும் அவ‌ர், வாடகை பணத்தை தானே தந்துவிடுவதாக உறுதி அளிக்கிறார்.

நமது நாடோடிக்கு இப்போது பணம் தேவை. அதிகமாக அதுவும் குறுகிய காலத்தில். குத்துச் சண்டை போட்டியில் தன்னுடன் மோதினால் ப‌ரிசுத் தொகையில் ச‌ரிபாதியை தந்து விடுவதாக கூறுகிறான் ஒருவன். நம்பிப் போனால் நிஜ குத்துச் சண்டை வீரனுடன் மோத வேண்டியதாகி விடுகிறது. அப்படியும் நம்பிக்கை இழக்காமல் இரவு நகரத்தை ரோந்து வரும் வேளையில் போதை செல்வந்தர் சாப்ளினை அடையாளம் கண்டு கொள்கிறார். வழக்கம்போல் வீட்டிற்கு அழைத்து செல்பவர் கண் தெ‌ரியாத பெண்ணின் சிகிச்சைக்கு ஆயிரம் டாலர் தருகிறார்.

அதேநேரம் செல்வந்த‌ரின் வீட்டிற்குள் பதுங்கியிருக்கும் திருடர்கள் தப்பித்து ஓடுகிறார்கள். போலீசை அழைக்கும் சாப்ளின் பணத்துடன் மாட்டிக் கொள்கிறார். செல்வந்தருக்கு சாப்ளினையோ, அவருக்கு பணம் கொடுத்ததோ நினைவில் இல்லை. சாப்ளினை திருடன் என முடிவு செய்கிறது போலீஸ். அவர்களிடமிருந்து பணத்துடன் தப்பிக்கிறார் சாப்ளின். கண் தெ‌ரியாத பெண்ணிடம் பணத்தை ஒப்படைத்து திரும்பும் வழியில் சாப்ளினை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது.

கிழிந்த உடையும், கலங்கிய மனதுமாக இப்போது சாப்ளின் ஒரு பிச்சைக்காரனுக்கு‌ரிய தோற்றத்தில் இருக்கிறார். தெருவில் நடந்துவரும் அவரை சிறுவர்கள் கேலி செய்கிறார்கள். சுற்றிலும் உள்ளவர்கள் ப‌ரிகாசத்துடன் சி‌ரிக்கிறார்கள். வேதனையுடன் திரும்பும் சாப்ளின் அப்படியே நின்றுவிடுகிறார். அவர் முன்னால் அந்த பூ விற்கும் பெண். அவளது தோற்றம் இப்போது சீமாட்டியைப் போல் மாறியிருக்கிறது. இப்போது அவள் தெருவில் பூ விற்கவில்லை. அவளுக்கென்று சொந்தமாக கடை இருக்கிறது.

சாப்ளினை பிச்சைக்காரன் என்று நினைக்கும் அவள், அவருக்கு பணம்தர முயல்கிறாள். சாப்ளின் வாங்க மறுக்கிறார். அவள் வலுக்கட்டாயமாக அவரது கையை பிடித்து தரும்போது அந்த ஸ்ப‌ரிசம் அவர் யார் என்பதை அவளுக்கு உணர்த்திவிடுகிறது. கண்ணீர் மல்க காதலர்கள் பார்த்துக் கொள்வதுடன் படம் நிறைவடைகிறது.

சாப்ளினின் அனைத்து திரைப்படங்களிலும் சமூக அவலங்களுக்கெதிரான விமர்சனத்தை காண முடியும். மனை திரைப்படத்தில் தெருவில் நடந்து வருவார் சாப்ளின். மாடியில் வசிப்பவர்கள் கொட்டும் குப்பை அவர் மீது விழும். மேலே பார்த்துவிட்டு நகர்ந்து செல்வா‌ர் சாப்ளின். சற்று துhரத்தில் வீதியின் ஓரம் குழந்தை ஒன்று அனாதையாக கிடக்கும். அதைப் பார்த்ததும் மேலே அண்ணாந்து பார்ப்பார். குப்பையை போல அந்த குழந்தை தெருவில் வீசப்பட்டிருப்பது அந்த மவுனமான ஒற்றை பார்வையில் வெளிப்படும்.

சிட்டி லைட்ஸ் படத்தின் முதல் காட்சியும் ஏறக்குறைய இப்படியொரு விமர்சனத்துடனே ஆரம்பமாகிறது. நகரத்தின் மேட்டுக்குடியினர் அமைதிக்காக திறக்கும் சிலையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார், சாப்ளின். அமைதிக்காக அவர்கள் திறக்கும் சிலையால் சாப்ளினின் இரவு தங்கும் இடம் பறிபோகிறது.

அதிகாரத்தை அது எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்ப்பவர் சாப்ளின். அவரது படங்களில் போலீஸ்காரர்கள் அதிகாரத்தின் குறியீடாகவே காட்டப்படுகிறார்கள். ஹிட்லரை கண்டு உலகமே பயந்திருந்த நேரம், தி கிரேட் டிக்டேக்டர் படத்தில் ஹிட்லரை துணிச்சலாக விமர்சித்தவர் சாப்ளின். எந்திரமயமாகி வரும் உலகில் மனிதன் எந்திரங்களின் அடிமையாகும் அபாயத்தை விளக்குகிறது, மாடர்ன் டைம்ஸ்.

சிட்டி லைட்ஸில் சாலையை கடக்கும் சாப்ளின், மோட்டர் சைக்கிளில் இருக்கும் போலீஸ்காரரை தவிர்க்கும் பொருட்டு பக்கத்தில் நிற்கும் கா‌ரினுள் புகுந்து சாலையின் மறுபுறம் உள்ள நடைபாதைக்கு வருவார். அவர் கார் கதவை திறக்கும் சத்தத்தை வைத்தே அவர் ஒரு செல்வந்தர் என்ற முடிவுக்கு வருகிறாள் தெருவில் பூ விற்கும் அந்த கண் தெ‌ரியாத இளம் பெண்.

சாப்ளினின் திரைப்படங்களில் மனிதர்களின் உளவியல் துல்லியமாக சித்த‌ரிக்கப்பட்டிருக்கும். சிட்டி லைட்ஸில் செல்வந்த‌ரின் வேலைக்காரன் சாப்ளின் மீது சதா வெறுப்பை காட்டுகிறான். சமூக அந்தஸ்தில் தன்னைவிட தாழ்ந்த ஒருவனுக்கு பணிவிடை செய்ய நேர்ந்த சாமானியனின் வெறுப்பு அது.

அதேபோல் தெருவில் சாக்கடையை ச‌ரி செய்கிறவன் குழிக்குள் இருக்கும் போது அவனிடம் எதிர்த்து பேசும் சாப்ளின் அவன் வெளியே வந்ததும் அவனது உயரத்தைப் பார்த்து பின்வாங்குவார். எளியோனை வலியோன் அடக்க நினைக்கும் அனைத்து இடங்களிலும் பொருத்திப் பார்க்க தகுந்த காட்சி அது. நாம் மேலே பார்த்த காட்சிகள் அனைத்தும் படத்தில் கண் இமைக்கும் நேரத்தில் வந்து செல்பவை என்பது முக்கியமானது.

சிட்டி லைட்ஸின் ஒவ்வொரு பிரேமையும் இப்படி தனித்தனியாக வியந்து சொல்ல இயலும். மேலும், நகரத்தின் நாடோடியான ஒருவனின் அர்த்தமில்லா வாழ்க்கையை எதிர்பார்ப்பில்லாத அன்பு அர்த்தம் மிகுந்ததாக்கி விடுவதையும் சொல்கிறது சாப்ளினின் இந்தப் படம்.

எதிர்பார்ப்பில்லாத அன்புதானே மானுட வாழ்வின் பேரதிசயம்.