Tuesday, June 22, 2010
என்.எஸ்.கிருஷ்ணன் - சிரிக்க வைத்த சிந்தனையாளர்
நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசேரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பேரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.
என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்கச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசேரியில் நாடகம் போட வந்த ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.
பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.
ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.
இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.
நாடகத்தில் பல பரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லுப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெயரில் வில்லுப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அருந்தாமை கொள்கையைப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.
கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதினார் அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.
கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.
நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.
கலைவாணரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.
தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.
சாமா அய்யர் கதைப்படி வில்லன். நாயகியை கடத்தி வந்து ஐயாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார். அவருக்கு உடந்தையாக இருக்கும் தாசி கமலம், அவரிடமிருந்து பணத்தை அபேஸ் செய்ய சாமா அய்யரை மயக்கி பாட்டுப் பாடும் காட்சியும் படத்தில் உண்டு.
1935ல் எடுக்கப்பட்ட மேனகாவில் வில்லனாக காட்டப்பட்டவர் ஒரு அய்யர். ஆனால் இன்று...? அய்யர் என்றாலே அப்பாவிகள், அநீதியை கண்டு குமுறுகிறவர்கள். (அய்யர் என்றால் அக்மார்க் அம்மாஞ்சிகள் என்ற இன்றைய தமிழ் சினிமா கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று).
பாரதியார் பாடல்கள் முதலில் திரையில் ஒலித்தது ஏவி.எம். தயாரித்த படத்தில் என்று இன்றளவும் கூறப்படுகிறது. அந்த கருத்து தவறானது. திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் தயாரித்து ராஜா சாண்டோ இயக்கத்தில் கலைவாணர் நடித்த மேனகா திரைப்படத்தில்தான் முதல்முதலாக பாரதியார் எழுதிய வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே பாடல் ஒலித்தது.
திரைத்துறைக்கு வரும் முன்பே நாகம்மை என்பவருக்கும் கலைவாணருக்கும் திருமணம் நடந்தது. நாகம்மை அவரது உறவுக்காரர். நடிக்க வந்த பிறகு உடன் நடித்த டி.ஆர்.ஏ.மதுரத்தை காதலித்து இரண்டாவதாக மணம்புரிந்து கொண்டார். (மதுரத்துக்குப் பிறந்த குழந்தை இறந்த பிறகு மதுரத்தின் சம்மதத்துடன் அவரது தங்கை வேம்புவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்). கிருஷ்ணன், மதுரம் ஜோடி திரையில் புகழ்பெறத் தொடங்கியது.
தனது முதல் திருமணத்தை மறைத்தே மதுரத்தை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணன். இது தெரிய வந்த பிறகு கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தார் மதுரம். தியாகராஜ பாகவதரின் அம்பிகாபதி படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இந்தப் பிரிவு அதிகநாள் நீடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்தப் படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாததை உணர்ந்தவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர்.
கலைவாணரின் திரை ஆளுமையை வடிவமைத்ததில் பெரியாருக்கும், பா.ஜீவானந்தத்துக்கும் பெரும் பங்குண்டு. ஜீவானந்தம் கலைவாணரின் நெருங்கிய நண்பர். பெரியாரின் பிராமணருக்கு எதிரான கட்டுரைகள் கலைவாணரிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. தான் நடிக்கும் படங்களில் பகுத்தறிவு சிந்தனைகளை இயல்பாக சேர்த்துக் கொண்டார் கலைவாணர். பாகவதரின் பக்திப் படமான திருநீலகண்டர் படத்திலும் கடவுளை கிண்டல் செய்யும் பாடலை இடம்பெறச் செய்தார்.
இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றை குறிப்பிட வேண்டும். சிலரது நகைச்சுவையைப் போல் என்.எஸ்.கே.யின் நகைச்சுவை பிறரை காயப்படுத்துவதில்லை. ஹாஸ்யம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எழுதிய அறிஞர் வ.ரா. “கிருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே வினோதமாக இருக்கிறது. யாரை அவர் கேலி செய்து கிண்டல் பண்ணுகிறாரோ அவரும் சேர்ந்து சிரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். பிறருடைய உள்ளத்தை குத்திப் பிளப்பதில்லை. அவர் பிறருடைய உள்ளத்தை விரியச் செய்கிறார்.” என்று எழுதுகிறார்.
1944 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மோசமான வருடம். 1944 நவ. 27 கலைவாணரின் இரண்டாவது கைது நடந்தது. இந்துநேசன் பத்திரிகையாசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தொடர்பாக கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். லட்சுமிகாந்தனின் இந்துநேசன் ஒரு மஞ்சள் பத்திரிகை.
பிரபல நட்சத்திரங்களை பற்றி கற்பனையான கிசுகிசுக்களை எழுதி பத்திரிகையை நடத்தி வந்தார் லட்சுமிகாந்தன். அவரது பேனா கொடுக்குக்கு இரையாகாமல் இருக்க பலரும் அவருக்கு பணம் கொடுத்து வந்தனர். கலைவாணர் பணம் கொடுக்க மறுத்தார். கலைவாணர் பற்றியும் பாகவதர் குறித்தும் தனது பத்திரிகைகளில் கற்பனையான பல கதைகளை எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.
தங்களது நிரபராதித்துவத்தை நிரூபிக்க கலைவாணருக்கும், பாகவதருக்கும் பல வருடங்கள் பிடித்தது. சிறை மீண்டபின் பழைய உற்சாகத்துடன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார் கலைவாணர். கேரி கூப்பர் நடிப்பில் வெளிவந்த டெட்ஸ் கோஸ் டூ டவுன் படத்தை நல்லதம்பி என்ற பெயரில் மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், பானுமதி ஆகியோருடன் இணைந்து தயாரித்தார். அண்ணா படத்தின் திரைக்கதையை எழுதிக் கொடுத்தார்.
இந்தப் படத்துக்குப் பிறகு கலைவாணருடன் அண்ணாவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. கலைவாணர் வாங்கிக் கொடுத்த காரை அவர் திருப்பி அனுப்பினார். கலைவாணர் இயக்கிய முதல் படம் மணமகள். இன்றைய முதல்வர் கருணாநிதி படத்துக்கு வசனம் எழுதினார். நாட்டியப் பேரொளி பத்மினி அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான். கலைவாணர் இயக்கிய இன்னொரு படம் பணம்.
சொந்தமாக படம் தயாரிக்கத் தொடங்கிய பிறகு கலைவாணருக்கு வாய்ப்புகள் குறைந்தன. செலவு இருமடங்கானது. ஆனாலும், கலைவாணரைத் தேடி உதவி பெற்று செல்கிறவர்கள் குறையவில்லை. தன்னிடம் இல்லாதபோது பிறரிடம் கடன் வாங்கி உதவிகளைத் தொடர்ந்தார். இறுதிவரை அவரது உதவி செய்யும் குணத்தை தோல்விகளால் தடுக்க முடியவில்லை.
ஐம்பது வயதிற்குள் இதே புகழுடன் இறந்துவிட வேண்டும் என்று மதுரத்திடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் கலைவாணர். அதே போல் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி தனது 49வது வயதில் மரணத்தை தழுவினார் கலைவாணர்.
* * *
ஒரு கலைஞனை எங்ஙனம் நினைவுகூர்வது என்பது இன்னும் நமக்கு கைவரப் பெறவில்லை. அவனது ஆளுமையின் சாராம்சத்தை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் நமக்கு எப்போதும் தோல்வியே பரிசாகியுள்ளது. கலைஞனை, அவனது ஆளுமையை ஒரு பொருட்டாக மதிக்காததின் விளைவுகள் இவை என்ற புரிதலும் நமக்கில்லை.
பிறந்தநாள் அன்று நினைவுக்கூட்டம், ஒரு நினைவுச்சின்னம், அதிகபட்சம் தபால்தலை என நமது சடங்குகள் ஒரு வட்டத்தைவிட்டு வெளியேறியதில்லை. கலைவாணரும் இந்த வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.
கலைவாணர் என்றதும் அவரது சிந்திக்க வைக்கும் சிரிப்புக்கு முன்னால் நினைவுக்கு வருவது அவரது வள்ளல் குணம். பெரும்பாலான கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிறருக்கு உதாரணமாக இருப்பதில்லை. கலைவாணர் விதிவிலக்கு.
“என்னிடம் வந்து சேரும் பணத்துக்கும், பணக்காரர்களிடம் வந்து சேரும் பணத்துக்கும் வித்தியாசம் உண்டு. என் பணம் ஏழைகளுக்கு உதவும், பணக்காரர்களின் பணம் ஏழைகளை உறிஞ்சத்தான் உதவும்.” சொன்னது போலவே வாழ்ந்து காட்டினார். அதுதான் கலைவாணர்.
இந்த உதாரண குணத்தை இளைய தலைமுறை அறிய செய்திருக்கிறோமா என்றால் இல்லை. பாரியையும், கோரியையும் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது நல்லதுதான். அத்துடன் திருட வந்தவனை திருடன் என்று மனைவியிடம்கூட சொல்லாமல் தன்னுடைய நாடகத்தில் வேலை பார்ப்பவன் என்று கூறி அவன் தேவைக்கு பணம் கொடுத்து உதவிய கலைவாணரையும் சொல்லிக் கொடுப்பதுதானே நியாயம்.
மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போதும், கட்டுகட்டாக பணம் வைத்துச் சென்ற எம்.ஜி.ஆரிடம், சில்லரையாக வைத்தால் இங்கிருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பேனே என்று சொன்னவரின் கதை சிறார்களிடம் பதிய வைக்க வேண்டிய ஒன்றல்லவா.
சிறைக்கு சென்றுவந்த பிறகுதான் பம்மல் சம்பந்த முதலியார் அவருக்கு கலைவாணர் என்ற பட்டத்தை அளித்தார். ஏன்? அவரது வள்ளல் குணத்துக்கு முன்னால் சிறையும் சரி, தண்டனையும் சரி மாசு கற்பிக்க முடியவில்லை. உங்களுடைய கொள்கை என்ன என்று ஒருமுறை கேட்டதற்கு சுயமரியாதை என்று பதிலளித்தார் கலைவாணர். அவரது கொள்ளை சுயமரியாதை என்றால் அவரது குணம் அன்பு செய்வது.
இந்த இரண்டின் பிரதிபலிப்புதான் அவரது நாடகங்களும், சினிமாவும். இதுதான் அந்த கலைஞனின் சாராம்சம்... நினைவுச்சின்னம், நினைவுத் தபால்தலை போன்ற மரபான சடங்குகளால் கௌரவிக்க முடியாத கலைவாணர் என்ற மாமனிதனின் சாராம்சம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment